விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தொடர்ந்து இப்பகுதி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. ‘வனஜா பட்டாசு ஆலை’ என்ற தனியாருக்கு சொந்தமான ஆலையில் வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துள்ளன. விபத்தின் தாக்கத்தால் பட்டாசு ஆலையின் 4 அறைகள் முழுமையாக இடிந்து தரைமட்டமானதுடன், சுமார் 10 கி.மீ தூரம் வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது பணியில் இருந்த 17 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.





