தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கிரிக்கெட்டில் சச்சின் கிட்டதான் எல்லா ரெக்கார்டும் இருக்கும். அரசியலில் அப்படி முறியடிக்க முடியாத ரெக்கார்ட் அனைத்தும் திமுகதான் செஞ்சிருக்கு.. இனியும் நாமதான் ரெக்கார்ட் பிரேக் பண்ணுவோம்.
நமது திட்டங்களைப் பார்த்துதான் மத்திய அரசே COPY அடித்துக்கொண்டு இருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் OG! ரூ.8,000 கூப்பன் வெச்சி மகளிர் தங்களுக்கு தேவைப்படும் பொருளை வாங்கிக்கலாம். உங்களுக்குப் பிடித்த பொருளை உங்களுக்குப் பிடித்த பிராண்ட்ல வாங்கிக்கோங்க.. உங்க இஷ்டம் உங்க சாய்ஸ்தான். வீட்டுக்காரர் கிட்ட எல்லாம் கேக்காதீங்க. ஏதாவது கேட்டு முறைச்சாங்கன்னா. அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லுங்க. மக்களுக்காக உழைக்கும் இந்த ஸ்டாலின் கொரோனாவில் போயிருக்க வேண்டும் என வன்மத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே.. இந்த ஸ்டாலின் இன்னும் ஏராளமான திட்டங்களை செய்யப் போகிறேன்; நீங்களும் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்” எனப் பேசியுள்ளார்.





