இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்கள்
அறிமுகம்
இந்தியாவைப்போன்றே இந்துக்களின் புரதான கோவில்கள் இலங்கையிலும் இருக்கின்றது அதற்கான ஆராய்ச்சியாளர்களின் பதில் என்னவெனில், ஒரு காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவின் தென்பகுதிக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும் படகுகள் மூலம் போக்குவரத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இராமாயண காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் மிக நெருங்கிய தொடர்பு இருந்தமையும் தெரிய வருகின்றது.
இந்தியாவில் உள்ள புராதன கோவில்கள் பற்றி அறிய…
ஆன்மீகம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் என்று வரும்போது பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் உள்ள இந்துக்களின் இதயங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்ச ஈஸ்வரங்கள் என்ற சொல் இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இந்துக்கடவுளாகிய சிவபெருமானுக்குரிய பழமையான ஐந்து கோவில்களை குறிக்கின்றது. திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்களே அவையாகும். இவ் ஈஸ்வரங்கள் அழகிய இலங்கைத்தீவின் கரையோரப் பகுதிகளில் அமைந்து காணப்படுகின்றது. இக்கோவில்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அழகு, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலை சிறப்பையும் கொண்டுள்ளது. இக்கட்டுரையின் மூலம் பஞ்ச ஈஸ்வரங்கள் ஒவ்வொன்றினுடைய வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்பதிவை தொடர்ந்து செல்வோம்.
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேச்சரம் எனும் அழகிய சிவனுக்குரிய ஆலயமானது இலங்கைத்தீவில் உள்ள திருகோணமலை எனும் குறிஞ்சியும், முல்லையும், நெய்தலும் ஒன்றாக அமையப்பெற்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயமானது திருகூடம், மச்சேஸ்வரம், தென்கைலாயம் என்ன பெயர்களாலும் அறியப்படுகின்றது. தேவாரப்பாடல் பெற்ற தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற தலமாகவும் விளங்குகின்றது. இத்தலத்தில் இறைவன் கோணேஸ்வரரும், இறைவி மாதுமையம்மாளும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இவ் ஈஸ்வரத்தின் தீர்த்தம் பாவங்களை தீர்க்கும் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கல்லால மரம் கருதப்படுகின்றது.

இவ்வாலயத்திற்கும் இராவண மன்னனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இத்தலத்தின் இன்றுவரை அமைந்துள்ள இராவணன் வெட்டு எனும் மலைப்பிளவு இதனை தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ் இராவணன் கல்வெட்டு ஆனது கோவிலின் வலது பக்கத்தில் மலையொன்று இரண்டாகப் பிளவுபட்டு காட்சியளிக்கின்றது.இராவணன் தனது வாளால் மலையை வெட்டிய இடமே இவ் இராவணன் கல்வெட்டு ஆகும். இது தொடர்பான விரிவான கதை உள்ளது. இந்தியக்கடற்பரப்பை கண்டும் காணாதவாறு அமைந்துள்ள கோணேஸ்வரம் கோயில் வரலாற்று முக்கியத்துவம், அழகு மற்றும் கட்டடக்கலை மகத்துவத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

அழகிய கடற்கரைக்காட்சிகளை கொண்ட இவ்வாலயம் ஆன்மீக ஆறதல் தலமாகவும், ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
இலங்கையின் கிழக்குக்கரையோரத்தில் அமைந்துள்ள திருகோணமலைப் பிரதேசம் மலைகள் மற்றும் நதிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். முகாவலிகங்கை எனும் இலங்கையின் மிகப்பெரிய மற்றும் புனித நதியானது இத் திருகோணமலைப்பிரதேசத்திலே கடலுடன் கலக்கின்றது. அங்கு சுவாமி மலை எனப்படும் உயர்ந்த பாறைக்குன்று ஒன்றின் உச்சியில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்டு தற்போது புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் மகாபாரதத்தில் கோகர்ணம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. பாரதம், இராமாயணம் ஆகிய இரண்டிலும் இவ்வாலயம் சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
திருக்கேதீஸ்வரம்
கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரத்தில் அமைந்துள்ள கேதீஸ்வரம் பஞ்ச ஈஸ்வரங்களில் மற்றுமொரு முக்கியமான சிவன் ஆலயமாகும். கேது வழிபட்டமையால் இவ்வாலம் கேதீஸ்வரம் எனும் பெயரைப் பெறுகின்றது. திருக்கேதீஸ்வரம் ஆலயம் சிக்கலான கல் சிற்பங்களை கொண்டிருப்பதுடன் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாகவும் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் மாதோட்டம் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இலங்கை நாட்டுப்பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியமையால் நாகநாதர் என்ற சிறப்புப்பெயரும் இவ்வாலயத்திற்கு உண்டு. திருத்தாண்டம் மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலும் இவ்வாலயம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்

இவ்வாலயத்தில் இறைவன் கேதீஸ்வரரும் இறைவி கௌரியம்பாளாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். தலவிருட்சமாக வன்னிமரத்தைக் கொண்டுள்ளதுடன் வருடந்தோறும் பாலாவிக்கரையில் தீர்த்தத்திருவிழா இடம்பெறுகின்றது.
போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றிய போது இந்துக்கோவில்கள் பலவற்றில் நிறைந்திருந்த ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் இந்துக்கோவில்களையும் இடித்து தரைமட்டமாக்கினர். இவ்வாறு இவ்வாலயம் 1505ம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இக்கோவிலின் ஏராளமான வளங்கள் கிறிஸ்தவ ஆலயங்களை கட்டுவதற்காக போர்த்துக்கேயரால் பயன்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து சுமார் 400 வருடங்கள் கழித்து 1910ம் ஆண்டு ஈழத்து சைவ மக்கள் இணைந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலுடன் சிவாகம முறைப்படி இவ்வாலயம் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
முன்னேச்சரம்
இலங்கையிலே சிவனுக்குரிய தொன்மைமிக்க ஆலயங்கள் வரிசையில் முன்னேச்சரம் பற்றி அறிந்துகொள்வோம். இவ்வாலயம் வடமேல் மாகாணத்தின் சிலாபம் எனும் ஊரில் சிறப்புமிக்க ஆலயமாகத்திகழ்கின்றது. வருடத்தில் இருமுறை மகோற்சவம் நடைபெறும் சிவாலயம் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு உண்டு. இறைவன் முன்னைநாதப்பெருமானுக்கும் இறைவி வடிவாம்பிகை அம்பாளுக்கும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஆவணிப்பௌர்ணமி தினத்தை தீர்த்தோற்சவமாகக்கொண்டு இருபத்தேழு நாட்கள் முன்னைநாதப்பெருமானின் உற்சவம் நடைபெறும். இவ்வாலயம் அழகேஸ்வரம் எனவும் அழைக்கப்படுகின்றது. முன்னேஸ்வரம் கோவிலை சுற்றி இன்னும் பல சைவ ஆலயங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தலம் தொடர்பாக புராணக்கதை ஒன்று உள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் தன்னை எதிர்த்த சிவபக்தனான இராவணனை அழித்தார் இதனால் ஏற்பட்ட தோசம் நீங்குவதற்காக இத்தலத்திலே சிவலிங்கம் அமைத்து வழிபட்டார் என இதிகாசங்கள் கூறுகின்றன.
இன்று இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் அன்னை வடிவாம்பிகை அறுபத்து நான்கு சக்திபீடங்களில் ஒன்றாகி மக்களுக்கு மக்களுக்கு அருட்சக்தி மிக்கவளாய் விளங்குகின்றார். சிவத்தலமாக இருப்பினும் இவ்வாலயத்தில் சக்திக்கு முக்கியத்துவமளிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அம்பாளின் அருளில் நாமும் துன்பங்கள் நீங்கி இன்hமாக வாழ்வோம்.
நகுலேஸ்வரம்
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற இவ்வாலயத்தின் இறைவன் நகுலேஸ்வரப் பெருமானும், இறைவி நகுலாம்பிகை எனவும் அறியப்படுகின்றது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குவதுடன், தீர்த்தமாக கீரிமலைத்தீர்த்தம் விளங்குகின்றது. இன்றைய காலத்தில் கீர்மலைக்கோவில், நகுலேஸ்வரம் என அறியப்படும் இவ்வாலயம் ஆரம்ப காலத்தில் திருத்தம்பலைக்கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டது. இறந்தவர்களுக்காக பிதிர்க்கடன் செய்வதற்கு முக்கிய ஆலயமாக இது விளங்குகின்றது.

நகுலம் என்ற வடமொழிச்சொல்லின் அர்த்தம் கீரி என்பதாகும். அதாவது இவ்வாலயத்திற்கு கீரிமலை என்ற பெயர் வருவதற்கு புராணக்கதை ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் மலையொன்றில் (மேரு மலை) சுதாமா எனும் பெயருடைய முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது யமக்கினி என்ற வேடன் முனிவரின் தவத்திற்கு இடையூறு விளைவித்தமையால் அவரின் சாபத்திற்கு உள்ளாகினான். ஆச்சாபத்தினால் அவனுக்கு கீரிமுகம் வாய்கப்பெற்றது. மனித உடம்புடனும் கீரித்தலையை கொண்ட சிற்பங்கள் இன்றும் ஆலயத்தில் காணக்கூடியதாக உள்ளது. பின்னர் அவ்வேடன் இவ்வாலய தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்து இப்பிரதேசமும் கீரிமலை, நகுலகிரி போன்ற பெயர்களால் அழைக்கப்படலாயிற்று.

மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களை கொண்டிருந்த இவ்வாலயமானது போர்த்துக்கேயர் காலத்தில் இடித்தொழிக்கப்பட்டது. பின்னர் ஆறுமுகநாவலப்பெருமானின் முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெற்று 1895ம் ஆண்டு மகாகும்பாபிN~கம் நடைபெற்று தற்போது ஆறகாலப்பூசைகளும் நித்திய கிரியைகளாக இடம்பெற்று வருகின்றது.

தட்சிணகைலாய புராணம், யாழ்ப்பாண வைபவமாலை, கைலாசமாலை, நகுலேச்சரப்புராணம், நகுலகிரிப்புராணம் போன்ற ஏராளமான நூல்கள் இவ்வாலயத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.
தொண்டீச்சரம்
தொண்டீச்சரம் என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர எனும் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். பஞ்ச ஈஸ்வரங்களில் இவ்வாலயம் தவிர்ந்த ஏனைய நான்கும் பல்வேறு இன்னலகளுக்கு மத்தியிலும் இன்று வரை அவை இந்துக்களுக்கே உரித்தான சிவாலயங்களாக் திகழ்கின்றன. ஆனால் இவ்வாலயம் மாத்திரம் அழிவடைந்து காணாமல் போயுள்ளமை மனதிற்கு வருத்தத்தை அளிக்கின்றது. இவ்வாலயம் போர்;த்துக்கேயர் காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. தற்போது அக்கோவில் இருந்த இடத்தில் புத்த மத விகாரை ஒன்று உள்ளது. அருகில் விஷ்ணு கோவில் ஒன்றும் அமைக்கப்பட்டு சிங்களவர்களால் “தெவிநுவர கோயில்” என்ற பெயரில் வழிபடப்படுகின்றது. பௌத்த விகாரைக்கு அருகில் விஷ்ணு கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில் சிங்கள் மக்கள் மகாவிஷ்ணுவை சக்க தெய்யோ என்று வழிபடுகின்றனர். மேலும் கணபதி மற்றும் கண்ணகியை முறையே கண தெய்யோ, பத்தினி தெய்யோ என வழிபடுகின்றனர்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இவ்வாலயம் இந்துக்களின் பூர்வீக ஆலயம் என்பதை வெளிப்படுத்தும் சிவலிங்கம், விநாயகர், முரகன், நந்தி மற்றும் துவாரபாலகர்களின் சிலைகள் கருங்கற் தூண்கள் என ஏராளமான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனினும் இத்தகவல்கள் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.