சென்னையில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அத்தனை சக்திகளும் தடையாக இருந்த போது 100 ஆண்டுகளுக்கு முன்னரே நியூ யார்க் சென்று சாதித்தவர் அம்பேத்கர் என்று தெரிவித்தார். மேலும் எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னைக்கும் நிறைய பேரிடம் உங்களுக்கு பிடித்த சுற்றுலா இடம் எது என்றால் நியூ யார்க் என்று தான் கூறுவார்கள். ஆனால் நூறு ஆண்டுக்கு முன்பே நியூ யார்க் சென்று உலக புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்று சாதித்த அசாத்தியமானவர் இருந்தார். அவர் எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்.”
“அன்றைக்கு அந்த மாணவரிடம், நீ இந்த சாதியில் பிறந்திருக்கிறாய் உனக்கெல்லாம் படிக்க தகுதியில்ல, நீயெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவர் பிறந்த சமூகமே அவரை தடுத்தது. அதைமீறி பள்ளிக்கூடம் சென்றாலும் சக மாணவர்களோடு உட்கார்ந்து படிக்க அவருக்கு அனுமதியில்லை. தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கூட இல்லை. அப்படி அத்தனை சக்திகள் அவருக்கு எதிராக இருந்தது.”
“ஆனால் ஒரே சக்தி மட்டும் தான் நீ தொடர்ந்து படி என்று கூறிக் கொண்டே இருந்தது. அது தான் அந்த மாணவருக்குள் இருந்த வைராக்கியம். எப்படி அந்த சின்ன வயதில் அந்த மாணவருக்கு அந்த வைராக்கியம் வந்தது என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது.”
“எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் யாரும் இப்படியொரு மாற்றத்தை கண்டிருக்க மாட்டார்கள். அந்த மாணவர் வேறு யாருமில்லை, நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான். வன்மத்தை மட்டுமே காட்டிய இந்த சமூகத்திற்கு திரும்பி அவர் என்ன செய்தார் என்பதை படித்து பார்க்கும் போது, அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.”
“பிறப்பால் நாம் அனைவரும் சமம், நீ எந்த சாதியில் பிறந்து இருந்தாலும், எந்த மதத்தை நீ பின்பற்றினாலும், சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் நம் அரசியல் சாசனத்தை வழங்கி நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்.”
“இன்னைக்கு வெளியாகும் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற இந்த புத்தகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமே இருக்கிறது. அதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது அவர் எழுதிய சுயசரிதை தான். அதற்கு தலைப்பு “வெயிடிங் ஃபார் ஏ விசா” என்று வைத்திருந்தார். அதில் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்கள், அவரை பாதித்த விஷயங்கள் என ஆறு சம்பவங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் இரு விஷயங்கள் என்னை பாதித்தது,” என்று தெரிவித்தார்.