Home » News » அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பம் வந்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பம் வந்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. அதே போல் ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன. இந்நிலையில், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, “அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.